Thursday, April 9, 2020

வானம்



நட்சத்திர நினைவுகள்  ஏந்தி
நன்கொடையாய் மழைத்தூவும்
பேரண்டத்தின் போர்வையாய்
பூவுலகின் விண்தேவதையாய்
அடர்ந்த காடாய், அழகிய ஒளியாய்
வியப்பின் விளிம்பாய்  விரிந்து கிக்கும்
வாணழகே ! விண்சித்திரமே !
நீ அப்படி என்னதான் சாதித்துவிட்டாய் ?
எவருமே உன்னை அன்னார்ந்தே பார்க்கும் அளவிற்கு,
உன்னழகை பாடியவன் காதல் கவிஞராகினான்,
உன்னை பக்தியுடன் பற்றியவன் கடுவெளி சித்தராகினான்,
உன்னை  விளக்க முயன்றவன் விஞ்ஞானியாகினான்.
நீல போர்வைக்குள் நிறைந்திருக்கும் அற்புதமே !
உன் கடல்காதலன் உனைச்சேர ஏங்கி ஆவியாவதும் ,
அதைத்தாங்காது உன் கண்கள் கண்ணீர் மழை பொழிவதும்,
அடடா! உங்கள் துய்யக் காதலில் எங்கள் மெய் சிலிர்க்கிறது
அவன் எய்தும் அன்பால்தான்  உன் ஆனந்த சிரிப்பு
எழுவண்ண வில்லாய் வளைகிறதோ !
தொலைவில் நிகழ்ந்தாலும் உங்கள் தூய அன்பு வாழட்டும்
அதில் எங்கள் வாழ்வு நிலைக்கட்டும்.
           

Thursday, January 30, 2020

இறை ஈன்ற உயிர்


எள்ளலவும் ஏழறிவை உபயோகிக்கவில்லை

எத்துறையிலும் வல்லுனராகவும் இல்லை

எழில் கொஞ்சும் ஏகஅழகெல்லாம் இல்லை

சிந்தனை என்று ஏதும் இல்லை, இருந்தாலும்

அதைக் கூற எந்த வார்த்தை ஜாலங்களும் அறிந்ததில்லை

மொழி ஒன்றும் அறியாது நான் மொழிந்தாலும் புரியாது

நான் உண்ணும் முதல் உறக்கம் வரை சுயமாக எதுவும் செய்திட இயலாது

படுத்தேக்கிடக்கும் பற்றற்ற ஜீவன்.

எனினும்என்னை இந்த உலகம் தவமாய் கேட்கிறது,

ஏக்கமாய் எதிர்பார்க்கிறது,

என் முகம் கண்டு மகிழாத அகமே இல்லை,

சிந்தனையற்ற என்னை சீராக புரிந்து சேவை செய்கிறது

அளவில்லா அன்பை பொழிகிறது,

நான் எது புரினும் ரசனை நோக்குடனே ரசித்து மகிழ்கிறது

என்மீதாறும் எரிச்சல் அடைந்ததுமில்லை, ஏளனம் செய்ததுமில்லை

குற்றமும் கண்டதில்லை கோபத்தில் கண்டித்ததுமில்லை

போலியும் பொறாமையும் என்னை நெருங்கியதே இல்லை

பேச்சால் யாரும் வதைத்ததுமில்லை,

கவலை கண்ணீர் அறியாத என் கண்கள் கண்டதெல்லாம்,

அன்பும் அரவணைப்பும் நிறைந்த தாயுள்ளதாலாட்டுகள் மட்டுமே

வளர்ந்ததுதான் பிழையோ! அறிதலில்தான் குறையோ!

வெகுவாக தாலாட்டுக்கள் குறைந்து தூற்றலும் துன்பங்களுமே

துளிர்விடுகின்றன..

மாசற்ற மனதுடன் ஜனித்த மழலை மனதை மறப்பதுதான் நம்மரபோ!

பதின்பருவம் அடைந்தாலும் நம் பால்மனம் மறந்ததுதான் முறையோ!

இறை ஈன்ற உயிரென இவ்வுலகம் சேர்ந்தோம்,

இன்னல்கள் பல புரிந்து நம் தெய்வத்தன்மை இழந்தோம்.

நம்முள் புதைந்த பால் மனதை மீட்டெடுத்து பதியம் போட்டாலே,

நாம் தொலைத்த தெய்வத்தன்மையை தாமே அறிவோம்.




Friday, January 24, 2020

வலி



விழுந்தவுடன் தன் விரல் கொண்டு தாங்கிடுவாள்,
தாங்காமல் கதறியதும் கருணை எல்லாம் காட்டியதில்லை,
உடலென்றும் மனதென்றும் வேறுபாடேதும் பார்த்ததில்லை,
பஞ்சமின்றி பக்குவமாய் இரண்டிற்கும் பகிர்ந்தளித்திடுவாள்.
இவளின்றி உயிரில்லை, இவள்வந்தாள் உயிரே தொல்லை,
மண்ணகத்தில் இவளற்ற உயிர்ப்பும் இல்லை, இறப்பும் இல்லை
பாமரனை கூட பரமஹம்சராக ஆக்குவதில் பங்கு இவளுக்கே அதிகம்.
பெண்களுக்கோ, மாதம் ஒருமுறை மறக்காமல் வந்தருள்வாள்,
சிறிது நேரம் விழுந்தெழுந்து புரண்ட உடன் விளையாட்டாய் மறைந்திடுவாள்,
உடலில் ஊடுருவி இவள் போடும் ஆட்டம் நிறைந்ததுதான் நம்
வாழ்வென்னும் இந்த ஓட்டம் .....




.
.
.




#வலி

Tuesday, January 21, 2020

முதல் வணக்கம்


முதல் வணக்கம்

பிறந்தவுடன் தாய் அமுதாய் நாவில் விழுந்தவள்,
வளரும் பருவம் அனைத்திலும் வாழ்வின் அங்கமானால்,
உலகை உணர ஊடகமாய் உதவியவள்,
உணர்வுகளை உரைத்திட உச்சரிப்பில் நின்றவள்,
வியப்பிற்குரிய அவள் வல்லினமோ விண்ணழகு!
அதை வர்ணிக்க அவளிடமே வார்த்தை கடன் வாங்கவேண்டும்,
ஈடினையில்லா இடையினமோ ஏக அழகு!
எங்கு பார்த்தாலும் இதயத்தில் நின்றுவிடும்.
மெய்யுறுகச் செய்யும் மெல்லினமோ மோக அழகு!
மனதை மயக்கும் கவிகளின் மூலாதாரமது.
அவளது உயிரும் மெய்யும் சேர்ந்தாற்றும் தொண்டோ!
செவிகளுக்குள் சேர்த்திடும் சந்திரனின் குளிர்ச்சியை,
மனதினில் கலந்திடும் மதுவின் மயக்கத்தை,
வாழ்க்கையை வெறுத்து வேதனையில் உள்ளோருக்கு
ஆறுதல் அன்னையவள்..
துன்பத்தில் துவண்டு தற்கொலைக்கு போனவனையும்
ஊக்கமடைய செய்து உயிர் வாழ செய்துவிடுவாள்,
அவ்வளவு வலிமை அவளது ஒவ்வொரு சொல்லுக்கும்
சிந்தனைக்காரனுக்கு செல்வமாக சேர்ந்திடுவாள்,
பேச்சாளன்னுகோ பேருதவி புரிந்திடுவாள்
இப்படி அவள் புகழ் பாட ஆரம்பித்தால் முடிவு இல்லை முடிவிலிதான்.
அவள் மொழிப்பூக்கள் பரித்துகவிமாலைக் கோர்த்து
சிரம் தாழ்ந்து சிந்தை வளர வேண்டி சமர்ப்பிக்கிறேன் என் தமிழ் அன்னைக்கு என் முதல் வணக்கத்தை.