எள்ளலவும் ஏழறிவை உபயோகிக்கவில்லை
எத்துறையிலும் வல்லுனராகவும் இல்லை
எழில் கொஞ்சும் ஏகஅழகெல்லாம் இல்லை
சிந்தனை என்று ஏதும் இல்லை, இருந்தாலும்
அதைக் கூற எந்த வார்த்தை ஜாலங்களும் அறிந்ததில்லை
மொழி ஒன்றும் அறியாது நான் மொழிந்தாலும் புரியாது
நான் உண்ணும் முதல் உறக்கம் வரை சுயமாக எதுவும் செய்திட இயலாது
படுத்தேக்கிடக்கும் பற்றற்ற ஜீவன்.
எனினும், என்னை இந்த உலகம் தவமாய் கேட்கிறது,
ஏக்கமாய் எதிர்பார்க்கிறது,
என் முகம் கண்டு மகிழாத அகமே இல்லை,
சிந்தனையற்ற என்னை சீராக புரிந்து சேவை செய்கிறது
அளவில்லா அன்பை பொழிகிறது,
நான் எது புரினும் ரசனை நோக்குடனே ரசித்து மகிழ்கிறது
என்மீதாறும் எரிச்சல் அடைந்ததுமில்லை, ஏளனம் செய்ததுமில்லை
குற்றமும் கண்டதில்லை கோபத்தில் கண்டித்ததுமில்லை
போலியும் பொறாமையும் என்னை நெருங்கியதே இல்லை
பேச்சால் யாரும் வதைத்ததுமில்லை,
கவலை கண்ணீர் அறியாத என் கண்கள் கண்டதெல்லாம்,
அன்பும் அரவணைப்பும் நிறைந்த தாயுள்ளதாலாட்டுகள் மட்டுமே
வளர்ந்ததுதான் பிழையோ! அறிதலில்தான் குறையோ!
வெகுவாக தாலாட்டுக்கள் குறைந்து தூற்றலும் துன்பங்களுமே
துளிர்விடுகின்றன..
மாசற்ற மனதுடன் ஜனித்த மழலை மனதை மறப்பதுதான் நம்மரபோ!
பதின்பருவம் அடைந்தாலும் நம் பால்மனம் மறந்ததுதான் முறையோ!
இறை ஈன்ற உயிரென இவ்வுலகம் சேர்ந்தோம்,
இன்னல்கள் பல புரிந்து நம் தெய்வத்தன்மை இழந்தோம்.
நம்முள் புதைந்த பால் மனதை மீட்டெடுத்து பதியம் போட்டாலே,
நாம் தொலைத்த தெய்வத்தன்மையை தாமே அறிவோம்.
No comments:
Post a Comment