நட்சத்திர நினைவுகள் ஏந்தி
நன்கொடையாய் மழைத்தூவும்
பேரண்டத்தின் போர்வையாய்
பூவுலகின் விண்தேவதையாய்
அடர்ந்த காடாய், அழகிய ஒளியாய்
வியப்பின் விளிம்பாய் விரிந்து கிடக்கும்
வாணழகே ! விண்சித்திரமே !
நீ அப்படி என்னதான் சாதித்துவிட்டாய் ?
எவருமே உன்னை அன்னார்ந்தே பார்க்கும் அளவிற்கு,
உன்னழகை பாடியவன் காதல் கவிஞராகினான்,
உன்னை பக்தியுடன் பற்றியவன் கடுவெளி சித்தராகினான்,
உன்னை விளக்க முயன்றவன் விஞ்ஞானியாகினான்.
நீல போர்வைக்குள் நிறைந்திருக்கும் அற்புதமே !
உன் கடல்காதலன் உனைச்சேர ஏங்கி ஆவியாவதும் ,
அதைத்தாங்காது உன் கண்கள் கண்ணீர் மழை பொழிவதும்,
அடடா! உங்கள் துய்யக் காதலில் எங்கள் மெய் சிலிர்க்கிறது
அவன் எய்தும் அன்பால்தான்
உன் ஆனந்த சிரிப்பு
எழுவண்ண வில்லாய் வளைகிறதோ !
தொலைவில் நிகழ்ந்தாலும் உங்கள் தூய அன்பு வாழட்டும்
அதில் எங்கள் வாழ்வு நிலைக்கட்டும்.
Nice
ReplyDelete